சகிப்புத்தன்மை போதுமானதா? மதநல்லிணக்கத்திற்கு அடிப்படை தேவை பரஸ்பர மரியாதை

The Rational Hindu
The Rational Hindu
Published in
5 min readDec 2, 2017

--

by Rajiv Malhotra (ராஜீவ் மல்ஹோத்ரா)

தற்போது மதநல்லிணக்க பேச்சுவார்த்தைகளிலும், மாநாடு மற்றும் கருத்தரங்குகளிலும் அதிக அளவில் பயன்படுத்தப்படும் வார்த்தை “சகிப்புத்தன்மை”. அதாவது, ஒரு மதத்தவர் மற்ற மதத்தவர்களிடம் சகிப்புத்தன்மையோடு நடந்துகொள்வது ஒரு உயர்ந்த பண்பாக கருதப்படும் அளவிற்கு சகிப்புத்தன்மையானது பரிந்துரைக்கப்படுகின்றது.

ஒரு மனைவி, தனது கணவன் தன்னை வெறும் “சகித்துக்கொள்கிறார்” என்று அறிந்தால் அதை உயர்வாக எண்ணுவாரா? அதேபோல தனது கணவனை “சகித்துக்கொள்கிறேன்” என்று ஒரு மனைவி சொல்வாராயின் எந்தக்கணவனும் அதை ஏற்றுக்கொள்ளமாட்டார். உங்களுடைய நட்போ சுற்றமோ உங்களை சகித்துக்கொண்டிருக்கிறோம் என்று உங்களிடம் கூறினால், அதை அவமதிப்பாகத்தானே கருதுவீர்கள்? தன்மானம் உள்ள எந்த ஒரு நபரும் தனது சகஊழியர்கள் தன்னை சகித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று அறிந்தால், அது தனக்கு இழைக்கும் அவமரியாதை என்றே கருதுவார்.

சகித்தல் என்பது உண்மையில் தரக்குறைவான செயலாகும். நம்மைவிட தாழ்வாகவோ, தரம்குறந்தோ உள்ளவர்களைத்தான் நாம் சகிக்கமுற்படுவோம். ஆனால், மதநல்லிணக்க வட்டாரங்களில் ‘சகிப்புத்தன்மை’ ஒரு உயர்ந்த பண்பாக கருதப்படுகின்றது. அதாவது, தங்களது மதத்திற்குப்புறம்பான நம்பிக்கை கொண்டவர்களுக்கும், சிலை வழிபாடு முதலிய ஆராதனை முறைகள் பின்பற்றுபவர்களுக்கும், மதநம்பிக்கையற்றவைகளுக்கும் (நாத்திகவாதிக்களுக்கும்) தரக்கூடிய அதிகபட்ச மரியாதை தான் சகிப்புத்தன்மை.

சகிப்புத்தன்மையை ஒழித்துக்கட்டி அதற்கு பதிலாக “பரஸ்பர மரியாதை” என்ற பண்பை வழக்கத்தில் கொண்டுவரவேண்டிய காலம் கடந்தேறிவிட்டது.

ஐரோப்பாவில், பலநூற்றாண்டுகளாக கிறித்துவமத உட்பிரிவுகளுக்குள் ஆதிக்கப்போர் நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஒவ்வொரு உட்பிரிவை சார்ந்தவர்களும் தாங்கள் பின்பற்றுவதே ‘உண்மையான கிறித்துவம்’ என்ற உரிமைவாதத்தின் அடிப்படையில், தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்ட மற்றபிரிவினர்களுடன் சண்டையிட்டு அவர்களை ‘போலிமதத்தவர்’ என்று கூறி கொடுமை செய்தனர். இந்த ஆதிக்கப்போரை அறுதிக்குக்கொண்டுவருவதற்கு (அதாவது ஒரு முடிவுக்கு கொண்டுவருவதற்கு) “சகிப்புத்தன்மை” ஒரு சிறந்த உபாயமாக அறிமுகப்படுத்தப்பட்டது. வன்முறைகளை தடுத்து வெற்றிதோல்வியற்ற ஒரு முடிவுக்கு கொண்டுவரும்பொருட்டு ஒரு கருவியாக, அரசியல் தந்திரமாக “சகிப்புத்தன்மை” பயன்படுத்தப்பட்டது. வேற்றுமைகளை மதிக்கின்ற மனப்பான்மையையும், உண்மையான மதிப்பையும் மரியாதையையும் சாராதிருந்த காரணத்தாலேயே இந்த உபாயம் அதிக காலம் நீடிக்கவில்லை.

1990 களின் பிற்பகுதியில் க்ளேர்மோன்ட் உயர்நிலை பல்கலைகழகத்தில் (Claremont Graduate University) மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற மதநல்லிணக்க மாநாட்டில் கலந்துகொள்ள எனக்கு அழைப்பு வந்தது. அழைப்பை ஏற்றுபேசிய நான், அப்போதிலிருந்தே “சகிப்புத்தன்மை நல்லிணக்கத்தை பலப்படுத்தாது” என்ற வாதத்தை பலமாக வலியுறுத்தினேன். அங்கு கூடியிருந்த பலமதங்களையும் சார்ந்த தலைவர்கள் அனைவரும், பிறமதங்களிடம் தங்களுக்குள்ள சகிப்புத்தன்மையை பறைசாற்றும் தீர்மானம் ஒன்றை முன்வைத்தனர். அந்தத்தீர்மானத்தில் “சகிப்புத்தன்மை” என்ற சொல்லை மாற்றி “பரஸ்பர மரியாதை” என்றாக்கவேண்டும் என்று நான் வாதித்தேன். மறுநாள், மாநாட்டின் ஒருங்கிணைப்பாளரும், க்ளேர்மோன்ட் உயர்நிலை பல்கலைகழகத்தின் ‘மத ஆய்வு’ பிரிவின் தலைவியுமான பேராசிரியர் கேரன் ஜோ டார்ஜெசென் அவர்கள் என்னை சந்தித்து, நான் ஒரு பெரிய பரபரப்பை ஏற்படுத்திவிட்டதாகச் சொன்னார். மேலும் இத்தகைய புரட்சிகரமான வாதம் அங்கிருந்த பலருக்கும் எளிதில் ஒப்புக்கொள்ளக்கூடியதாக இல்லை என்றார். ஆனால், அவருக்கு இந்த கருத்து ஏற்புடையதாக இருக்கிறது என்றும் கூறினார். பரபரப்பானதொரு மதம்சார்கருத்துக்களத்தின் மையப்புள்ளியை எனது வாதம் அசைத்துவிட்டதை உணர்ந்தேன்.

இச்சம்பவத்திற்கு பிறகு எனது அனைத்து உரைகளிலும், மிகப்பரவலாக உபயோகப்படுத்தப்படுகின்ற “சகிப்புத்தன்மை வாதத்தை” முறித்து, “பரஸ்பர மரியாதை”யை புகுத்த முற்பட்டேன். தார்மீக பார்ம்பரியத்தில் உருவான (இந்து, பௌத்த, ஜைன, சீக்கிய) மதங்களை சார்ந்தவர்கள் இந்த மாற்றுக்கருத்தை மிக எளிதாக ஏற்றுக்கொள்ளும்போது, ஆப்ரகாமிய நம்பிக்கையின் வழிவந்த மதங்களை (அதாவது யூதர்களின் மததிலிருந்து வந்த கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம்) சார்ந்தவர்க்ளுக்கு இந்தக்கருத்து உகந்ததாக இல்லை என்பது மட்டுமின்றி, “பரஸ்பர மரியாதை” என்ற மேன்மையான கொள்கையை கடுமையாக எதிர்க்கவும் செய்தனர்.

இதனைத்தொடர்ந்து, 2000 ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையில் நிகழ்ந்த மில்லினியம் ரிலீஜியஸ் ஸம்மிட் என்ற மாபெரும் மாநாட்டில், ஹிந்து பேராள்குழுவிற்கு (delegation) தலைமை தாங்கிய ஸ்வாமி தயானந்த ஸரஸ்வதி அவர்கள், மாநாட்டின் அதிகாரபூர்வ வரைவு அறிக்கையில் (official draft) “சகிப்புத்தன்மை”க்கு மாற்றாக “பரஸ்பர மரியாதை” என்ற வார்த்தையை உபயோகிக்க வேண்டுமென்று ஆணித்தரமாக வலியுறுத்தினார்கள். மாநாட்டில் வாடிகன் பேராள்குழுவின் தலைவராக இருந்தவர், பின்னாளில் போப் பெனடிக்ட் ஆன கார்டினல் ஜோசப் ராட்ஸிங்கர் இதை தீவிரமாக எதித்தார். தாழ்த்தப்பட்டவை என்று கருதப்படும் பிறசமயங்களெல்லாம் (கிறிஸ்தவ மதத்திற்கு ஒப்பாக) சமமரியாதைக்குரியவை என்று அதிகாரபூர்வமாக பிரகடனப்படுத்திவிட்டால், மதமாற்றச்செயலுக்கான நியாயப்படுத்துதல் சாத்தியமற்றதாகிவிடும்.

விமர்சனங்களும் விவாதங்களும் அதிகரிக்க அதிகரிக்க இவ்விஷயம் நெருக்கடியானதொரு நிலையை எட்டி சண்டையாக வெடித்தது. இந்து சார்பாளர்கள் தங்களுடைய கருத்தில் மிக உறுதியாக இருந்தனர். தார்மீக பாரம்பரியத்தில் உருவான மதங்களை, ஆப்ரகாமிய நம்பிக்கையின் வழிவந்த மதங்களுக்கு இணையான மரியாதையோடு ஒப்புக்கொள்ளவேண்டிய காலம் கடந்து விட்டது. சகிப்புத்தன்மை என்ற நிலைப்பாடிலிருந்து விலகி பரஸ்பர மரியாதை ஓங்கவேண்டுமென்பதில் இந்து சார்பாளர்கள் மிக உறுதியாக இருந்தனர். வாடிகன் சார்பாளர்கள் செய்வதறியாது திகைத்தனர். முடிவாக, “பரஸ்பர மரியாதையே உகந்தது; நியாயமானது” என்று இறுதிதீர்மானம் இயற்றப்பட்டது. இது நிகழ்ந்து முடிந்த ஒரு மாதத்திற்குள் வாடிகன் புதியதொரு அறிக்கையை தனது கொள்கை அறிக்கையாக வெளியிட்டது. அதாவது “பிறசமயங்களை பின்பற்றுபவர்களுக்கும் இறையருள் கிட்டுமெனினும், கிறிஸ்தவ தேவாலயங்களில் நம்பிக்கை வைத்து ஒழுகுபவர்களோடு ஒப்பிட்டுப்பார்க்கும் போது, அவர்களுக்கு கிடைக்கும் அருள் மிகவும் குறைவானதே. கிறிஸ்தவ நம்பிக்கையாளர்களுக்கு கிடைக்கும் இரட்சிப்பும் மீட்பும் (grace and salvation) கிறிஸ்தவரல்லாத மற்றனைவருக்கும் கிடைக்க இயலாத மிகத்தீவிரமான ஒரு குறைபாடு உள்ளதாக அந்த அறிக்கை வெளியிட்டது. முற்போக்கு எண்ணம் கொண்ட கிறிஸ்தவர்கள் பலரும் இவ்வறிக்கையை எதிர்த்தபோதிலும், இன்று வரை இதுவே வாடிகனின் அதிகாரபூர்வமான கொள்கையாக உள்ளது.

கிறிஸ்தவ மதம் மட்டுமின்றி முற்போக்கு எண்ணம் கொண்ட இஸ்லாமிய மதசார்பாளர்களோடு பேசும் போதும் “பரஸ்பர மரியாதை” வாதத்தை முன்வைக்க துவங்கினேன். 2001, செப்டம்பர் 11 சம்பவத்திற்கு பிறகு டல்லாஸ் நகரத்தில் நடந்த வானொலிபேட்டியொன்றில், மதநல்லிணக்கத்திற்கு சகிப்புத்தன்மையைவிட பரஸ்பர மரியாதையே உகந்தது என்று விளக்கிச்சொன்னேன். பாகிஸ்தானில் ஒரு சிறு அமைப்பின் தலைவி என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட ஒரு அழைப்பாளர் எனது கருத்தை மிகவும் ஆமோதித்துப்பாராட்டினார். எனது கருத்தை மேலும் தெளிவுபடுத்தும் பொருட்டு, நான் இந்து நம்பிக்கை மற்றும் வழிபாட்டு முறைகள் பற்றி விவரிக்கலானேன். இந்து சமயத்திலுள்ள சிலை வழிபாடு பற்றியும், தெய்வத்தை ஆண் உருவில் மட்டுமின்றி பெண்ணுருவிலும் போற்றுகின்ற வழக்கதையும், மறுபிறவி நம்பிக்கையையும் பற்றி எடுத்துரைத்தேன். இந்து சமயக்கூறுகளை எல்லாம் மரியாதைக்குரியனவாக அவர் ஒத்துக்கொண்டதில் நான் மகிழ்ச்சி அடைந்தேன். மேலும், பரஸ்பர மரியாதை என்பது, தனது மத ஆசாரங்களை பிறர் ஏற்கவோ பின்பற்றவோ வேண்டும் என்ற எதிபார்ப்பின்றி, தனது மதத்திற்கு ஒப்பாக அவர்களது நம்பிக்கையையும் மரியாதைக்குரியதாக ஏற்றுக்கொள்வதே ஆகும் என்று தெளிவாக விவரித்தேன். ஏனெனில், வெறும் வெளிப்புற ஏற்றுக்கொள்ளுதல் அன்றி, மனமுவந்து ஏற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் ஆகையால், பரஸ்பர மரியாதை என்பதன் முழுப்பொருளும் அவருக்கு புரிய வைக்க வேண்டியது அவசியம் என்று எண்ணினேன. அவர் தொலைபேசி தொடர்பை துண்டித்தார்!

2007-ல் டில்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க எனக்கு அழைப்பு வந்தது. மதஒற்றுமைக்கு அடிகோலும் வகையில் எமரி பல்கலைக்கழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட பன்மதக்குழுமத்தை (Inter-religious Council) சேர்ந்த ஒரு குழுவினர் தங்களது மதநல்லிணக்கக் கொள்கைகளை பரப்பும் பொருட்டு டில்லியில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி அது. எமரி பல்கலைக்கழகத்தில் இயங்கும் “கிறிஸ்தவ தேவாலயம் மற்றும் மதக்கோட்பாடுகளின்படி வாழ்தல்” (Chapel and Religious Life) என்ற துறையின் தலைவரும் லூத்தரன் கத்தோலிக்க சபையின் ஆயருமாக செயல்படும் ஒரு பெண்மணியும் வந்திருந்தார். மத ஒற்றுமையை உருவாக்க அவர் செய்யும் பணிகளும், கத்தோலிக்க சபையின் குறிக்கோளான மதமாற்றப்பணிகளும் ஒருங்கிணைந்து செயல்படுத்துவது எந்த அளவு சாத்தியம் என்ற எனது கேள்விக்கு, இவை இரண்டையும் இணைத்து சீராக செயல்படுவது சாத்தியமே என்றார். நான் மீண்டும் “லூத்தரன் கொள்கை பிறமதங்களை சகிப்பதேயன்றி மரியாதையுடனான அணுகுமுறை அல்ல. மற்ற மதங்களுக்கும் சரிசமமாக மதிப்பளித்து, அவையும் இறைவனை அடைய முறைப்படியான மற்றொரு பாதையே என்று ஒப்புக்கொள்வது தானே மரியாதை என்பதன் உண்மையான வெளிப்பாடு” என்றேன். அதற்கு அவர் “இது ஒரு முக்கியமான கேள்வி” என்றும், தான் இதைப்பற்றி வெகுவாக சிந்திப்பதாகவும், இதற்கு எளிதில் விடை அளிக்க இயலாதென்றும் சொன்னார்.

எம்மத்தவராக இருப்பினும் தனது மதத்தவர்களிடம் ஒரு கருத்தையும் பிற மதத்தவர்களிடம் அவர்கள் மனதில் சந்தேகம் எழாத வகையில் மற்றொரு கருத்தையும் கபடபிரச்சாரம் செய்வது மிகவும் தாழ்ந்த செயலாகும். பரஸ்பர மரியாதை என்ற கொள்கை கிறிஸ்தவ மதத்திற்கு சவாலான கருத்து. ஏனெனில் மீட்பிற்கான ஒரேவழி யேசுகிறிஸ்துவை நம்புவதன் வாயிலாக அவர் மூலம் கிடைக்கப்பெறுகின்ற கிருபை தான். லூத்தரன் சபையின் அடிப்படை நம்பிக்கையே இந்த தனித்துவம் தான். இத்தகைய கோட்பாடுகளை அடிப்படையாக்கி இயங்கும் ஒரு கிறிஸ்தவ சபையின் தலைமை பொறுப்பில் உள்ளவருக்கு இந்து மதத்தை “சகிப்பதைதவிர” மரியாதையான அணுகுமுறை எப்படி சாத்தியமாகும்?

எனது குறிப்பான வினாக்களுக்கு அவர் அளித்த தெளிவற்ற பதில்களை நான் ஏற்றுக்கொள்வதாக இல்லை. எனவே நான் மேலும் கேள்விகள் கேட்கலானேன். “லூத்தரன் சபை ஆயரான உங்களுக்கு இந்து கடவுள்கள் மற்றும் இறைவடிவங்கள் மீதான மனோபாவம் என்ன? உங்களுடைய மதக்கொள்கைகள் இவற்றுக்கு எதிரானவை அல்லவா? கிருஷ்ணர், சிவன் முதலிய இந்து தெய்வங்களையும் கூட கடவுளின் உண்மையான அவதாரங்கள் என்று ஒப்புக்கொள்வீர்களா அல்லது “போலி தெய்வங்கள்” (false gods) என்று வகைப்படுத்துவீர்களா? கடவுள் ஒரு ஆண் என்று உறுதியாக நம்பும் உங்கள் கத்தோலிக்க சபை இந்துக்கள் வணங்கும் பெண்தெய்வங்களைக் குறித்து என்ன கருத்து வைத்துள்ளது?” என்னுடைய கேள்விகளுக்கு அவர் எந்த பதிலும் தராது மழுப்பினார்.

பரஸ்பர மரியாதை என்ற சொல்லின் உண்மையான பொருளை உணர்ந்து கொண்டு அதற்கு ஆதரவுதரும் மிக சிறுபான்மையான கிறிஸ்தர்களும் இருக்கவே செய்கிறார்கள். பிரின்ஸ்டன் நகரிலிருந்து வெளியாகும் “சேக்ரட் ஜர்னி” என்ற பத்திரிகையின் ஆசிரியரான ஜேனட் ஹாக் (Janet Haag) அத்தகையவர்களில் ஒருவர். 2008-ஆம் ஆண்டில் ஒரு முறை அவரை சந்தித்தபோது என்னுடய வழக்கமான கேள்வியொன்றை அவரிடமும் கேட்டேன்: “பன்மைத்துவம் (pluralism) பற்றி தங்கள் கருத்து என்ன?” அவரும் நான் எதிபார்த்த பதிலையே தந்தார்: “அத்தகைய மதங்களிடம் எங்களுக்கு சகிப்புத்தன்மை உள்ளது”. இந்து சமயத்தில் நிலவிவரும் பரஸ்பர மரியாதை பற்றியும், எப்படி ஓரோ ஹிந்துவுக்கும் தனது விருப்பப்படி இஷ்டதெய்வத்தை வணங்கும் சுதந்திரம் பற்றியும், “ஸ்வதர்மம்” என்றழைக்கப்படுகின்ற, தனக்கேற்றபடியான ஆன்மீகப்பாதையை தொடர்வதற்க்கான சுதந்திரம் பற்றியும் அவரிடம் விரிவாக விளக்குவதற்கு அவரது பதில் எனக்கு தூண்டுகோலாக அமைந்தது. எனது கருத்தை உன்னிப்பாகவும் உணர்ச்சிவசப்படாமலும் கேட்டுப்புரிந்துகொண்டவர், தனது பத்திரிகையின் அடுத்த இதழில் இக்கருத்தையே தலையங்கமாக்கினார்:

செயலூக்கம் கொண்டதும் பயனுள்ளதுமான ஒரு மதநல்லிணக்க கொள்கையின் அவசியம் குறித்து திரு. ராஜீவ் மல்ஹோத்ராவுடனான எனது உரையாடலில், “இன்றைய உலகில் புரிதல் மற்றும் அமைதியை பரப்பும் நோக்கோடு அமையும் நமது செயல்கள் யாவும் குறைபாடு உள்ளதாகவே இருக்கின்றன. சகிப்புத்தன்மை என்ற கொள்கையை பின்பற்றுவதே இதற்கு காரணம். இதிலிருந்து விலகி பரஸ்பர மரியாதை தருதல் என்ற கொள்கைக்கு மாறவேண்டியது எவ்வளவு அவசியம்” என்பதை வலியுறுத்தினார். அவரது சொற்கள் என்னை ஆழமாக சிந்திக்கத்தூண்டியது மட்டுமல்லாது ‘சகித்தல்’ மற்றும் ‘மரியாதை தருதல்’ என்ற சொற்களுக்கிடையேயான பெரும் வித்தியாசத்தையும் உணர்ந்தேன். பொருளில் மட்டுமல்லாது, அவற்றின் குறிப்பும் நோக்கமும்கூட மிகவும் வேறுபடுகின்றன.

அவர் மேலும் எழுதியதாவது: “லத்தீன் மொழிச்சொல்லான ‘tolerance’ சகித்தல் அல்லது (வேறு வழியின்றி) தாங்குதல் என்றே பொருள்தரும்; அன்றி பரஸ்பர மதிப்பையும் ஆதரவையும் உறுதிப்படுத்துவதல்ல. அது மட்டுமல்லாது tolerance என்ற சொல் இயற்கையாகவே ஏற்றத்தாழ்வு மற்றும் ஒன்றிற்கு (அ) ஒருவருக்கு, மற்றொன்று (அ) மற்றொருவர் சமானமல்லாத நிலையையும் குறிக்கிறது. அதாவது, ஒருபுறத்தார் (மதிப்பை) தரவோ, தருவதை தடுக்கவோ முடிகின்ற பலம் பெற்றவரும், மறுபுறத்தார் பெறமட்டுமே தகுதியுள்ள பலம் குறைந்தவராகவும் அமைகின்ற ஏற்றத்தாழ்வு நிலையை குறிக்கிறது. ஆனால், மதித்தல் (respect) குறிக்கும் லத்தீன் வார்த்தை “நாம் அனைவரும் சமமான மரியாதைக்குரியவர்கள் என்பதை குறிக்கும். தனித்துவவாதமோ அது குறித்து அகந்தைகொள்வதையோ அது குறிக்காது. பரஸ்பர மரியாதையின் அடிப்படை இதுவே ஆகும்”.

மேலும் விவரங்களுக்கு:

ஐ. ஐ. டீ. சென்னையில் ஒரு சுவதேசி கல்வி மாநாடு நடக்க இருக்கிறது. அதன் தலைப்பு: தருமத்தின் பூமி தமிழ் நாடு. இந்த இணையதலத்தை பார்க்க — http://swadeshiindology.com/si-3/

--

--